தமிழ்த் தேசியத்தின் தந்தை - பாவலரேறு

பாவலரேறு

தமிழ்த் தேசியத்தின் தந்தை

இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும், இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது. தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப்பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும், ஆகவே தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்

.
பாவலரேறு எனவும் பெருஞ்சித்திரனார் எனவும் போற்றி மதிக்கப்படும் இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் துரைசாமி குஞ்சம்மாள் தம்பதியினர். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். ஆனால் இவர் தம்முடைய தந்தையார் பெயரை இணைத்துத் துரை மாணிக்கம் என்று மாற்றிக் கொண்டார். இவரைத் தொடக்க காலத்தில் இந்தப் பெயரிலே அழைத்தனர். பள்ளிப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்துப்பத்திரிகையும் சிறிது காலம் கழித்து அருண்மணி என்னும் புனைப்பெயரில் மலர்க்காடு என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் நடத்தினார். கல்லூரியில் பயிலும் போது பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். தம்முடைய கல்லூரி வாழ்க்கையில் கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பின்னாளில் இவர் தாமரை அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

முதன் முதலாகப் பணியில் இவர் புதுவை அஞ்சல் துறையில் பணியாற்றினார். பிறகு கடலூருக்கு மாற்றப்பட்டார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகர முதலித் துறையில் பணியேற்றார். இந்தச் சூழலில்தான் தென்மொழி என்ற இதழை 1959ல் தொடங்கி நடத்தினார். இந்த இதழுக்காகத் தனது இயற்பெயரை விடுத்து பெருஞ்சித்திரன் என்ற புனைப்பெயரில் எழுதினார். தென் மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும், பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் வெளியாகியது. இந்தி எதிர்ப்புப் போரில் தென்மொழி இதழுக்குப் பெரும் பங்குண்டு. இவர் எழுதிய பாடல்கள் இநதி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் விரும்பும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். அரசு வேலையைத் துறந்து முழு நேரப் பணியாக தென் மொழி இதழையும் தனித்தமிழ் உணர்வையும் பரப்பியவர். 1973ல் தென்மொழிக் கொள்கைக்காகச் செயற்பட்டு மாநாட்டை மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது, சிறையில் அடைக்கப்பட்டார். இக்காலக் கட்டத்தில் பாவலரேறு என்னும் சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்த போது சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி, தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, விடுதலை,, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் ஆகிய இதழ்களில் எழுதினார். முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து இவர் தீவிரமாக வேறுபட்டார். தமிழ்நாடு இந்திய அரசு கூட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே இவரின் தீவிர அரசியல் நிலைப்பாடாக இருந்தது. கடைசி வரை தமிழ், தமிழர் வளர்ச்சியை விட தனக்கெனத் தனியாக ஒரு வளர்ச்சி இல்லை என்று கூறியவர் பெருஞ்சித்திரனார்.


பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கள்
1. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி - 1
2. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி - 2
3. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி - 3
4. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி - 4
5. கனிச்சாறு தொகுதி - 1
6. கனிச்சாறு தொகுதி - 2
7. கனிச்சாறு தொகுதி - 3
8. நூறாசிரியம்
9. செயலும் செயல்திறனும்
10. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
11. வேண்டும் விடுதலை
12. சாதி விடுதலை
13. ஐயை (பாவியம்)
14. கொய்யாக்கனி (பாவியம்)
15. பாவியக்கொத்து (பாவியம்)
16. பாவேந்தர் பாரதிதாசன்
17. பெரியார்
18. உலகியல் நூறு
19. மொழிஞாயிறு பாவாணர்
20. பள்ளிப்பறவைகள் (குழந்தைப்பாடல்கள்)
21. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
22. தன்னுணர்வு
23. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்
24. வரலாறு மறைக்கப்படுகின்றது
25. மகபுகுவஞ்சி
26. அறுபருவத் திருக்கூத்து
27. கற்பனை ஊற்று
28. நமக்குள் நாம்
29. ஓ! ஓ! தமிழர்களே
30. நெருப்பாற்றில் எதிர்நீச்சல்
31. தமிழீழம்
32. இளமை விடியல்
33. கழுதை அழுத கதை
34. தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வளர்ச்சி வரலாறும்
35. வாழ்வியல் முப்பது
36. எண்சுவை எண்பது
37. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?
38. கனிச்சாறு தொகுதி - 4
39. கனிச்சாறு தொகுதி - 5
40. கனிச்சாறு தொகுதி - 6
41. கனிச்சாறு தொகுதி - 7
42. கனிச்சாறு தொகுதி - 8
43. உலகியல் நூறு
44. திருக்குறள் தொடர் சொற்பொழிவு உரைகள் - 1
45. திருக்குறள் தொடர் சொற்பொழிவு உரைகள் - 2
46. திருக்குறள் தொடர் சொற்பொழிவு உரைகள் - 3
47. திருக்குறள் தொடர் சொற்பொழிவு உரைகள் - 4
48. திருக்குறள் தொடர் சொற்பொழிவு உரைகள் - 5

No comments:

Post a Comment