விளையாட்டு

மட்டைப்பந்து



"11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் கைதட்டி இரசிக்கும் விளையாட்டு" – என மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டு பற்றி, இங்கிலாந்து நாடு உலகுக்குத் தந்த மாபெரும் இலக்கியமேதை ஜார்ஜ் பெர்னாட்சா சொன்னார்!

காலையில் எழுந்தவுடன் மக்களின் முதல் தேர்வு தொலைக்காட்சியாகி விட்டது. அதில் ஒரு சாரார் சினிமா, மற்றொரு சாரார் கிரிக்கெட் பார்க்கின்றனர். சொல்லப்போனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் அடிப்படை குணங்கள் ஒன்றுதான். கவர்ச்சியான தொடக்கம், அதிரடியான வளர்ச்சி, சஸ்பென்ஸான முடிவு என்று பல விசயங்களில் சினிமாவை விட கிரிக்கெட்டில் அதிகம் இருக்கிறது. அதனால்தான் என்னவோ? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்கும் அப்படி ஒரு பந்தம் உள்ளது போல.
கிரிக்கெட்டில் விளையாட்டாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் வரும் தொழிலாகவும் மாறிவிட்டது.
 
இதனிடையே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தோன்றி மற்ற அனைத்து சர்வதேச விளையாட்டுகள் எதையும் வளரவிடாமல் செய்த பெருமை கிரிக்கெட்டையே சேரும். ஆரம்ப காலத்தில் பிரபுக்கள் என்று அழைக்கப்பட்ட மேட்டுக்குடி மக்கள் தங்கள் மீது சூரிய ஒளிபடும் விதமாக காலார நடந்து சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்யும் விதமாகவும் உருவாக்கப்பட்டது தான் கிரிக்கெட். இதை ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆட்சி செய்த காலனி நாடுகளுக்கும் பரப்பினர். இன்றும் காலனி ஆட்சி நாடுகளான காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பெரிய அளவில் விளையாடப்படுகிறது என்பதே உண்மை. ஆனால் அன்று கூட இங்கிலாந்து நாட்டில் உழைத்து வாழும் மக்கள் கிரிக்கெட் விளையாடியதில்லை என்பது கண்கூடு.
 
 
இதன் அடிப்படையில் கிரிக்கெட் இந்தியாவிற்கு வந்த மேட்டுகுடி ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை ரஞ்சித் சிங் போன்ற அரசர்களும் பட்டோடி நவாப் போன்ற ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசிய மேட்டுக்குடியினரும் விளையாடி வந்தனர். தமிழ்நாட்டில் மேல்சாதி ஓரிருவர் மட்டுமே பிற்காலத்தில் இதில் கலந்து கொண்டனர். இப்படியாக வளர்ச்சி பெற்ற கிரிக்கெட் இன்று நமது பாரம்பரியமான விளையாட்டுகளை அழித்து, நமது கலாச்சாரத்தையும் கெடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாதது.
 
  
 ஆனால் வேறுவிதமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் மைதானம் மட்டும் இல்லாமல் வீரர்களின் முதுகிலும், ஏன்! முகத்திலும் கூட தங்களின் முத்திரையை குத்திவிட்டனர். அனைத்துக்கும் ஒரு விலை அவ்வளவுதான். இப்படி கிரிக்கெட்டில் தொட்ட இடம் எல்லாம் பணம் கொழிக்கிறது.
 
இப்படி இந்தியாவில் தொழிலாக மாறிவிட்ட கிரிக்கெட்டை வளர்ப்பதும், கட்டுப்படுத்துவதும் உலகின் பணக்கார அமைப்புகளுள் ஒன்றான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் யார்? நிர்வாகிகள் யார்? அதன் நிர்வாக உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்? அதன் தேர்தல் முறை என்ன? அதன் செயல்பாடு என்ன? அதன் வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு? என அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருக்கும். வெளிப்படையாக எதுவும் நடக்காது. இந்த ‘‘பிசிசிஐ’’ இன்று பில்லியர்ன்ஸ் (கோடீஸ்வரர்கள்) கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் என்றாகிவிட்டது. முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களும் வர்த்தக நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையின் சொத்துக்களாக சுருங்கிவிட்டனர்.
 
 
இப்படிப்பட்ட வணிக நிறுவனங்களின் வருமானத்திற்காக பிசிசிஐ&யால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). விளம்பரதாரர்களால் இயக்கப்பட்டு, ஊடகங்களால் வழி நடத்தப்பட்டு, பரபரப்பை மட்டும் குறியாக செயல்படுவது தான் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இப்படி பரபரப்பை பயன்படுத்தி கோடிகளை குவிப்பதுதான் ஐபிஎல்லில் பங்கெடுக்கும் நிறுவனங்களின் நோக்கம், லட்சியம் அனைத்தும் அதுவே. இந்தியாவை ஆளும் அரசுகளோ தன் மக்களை கெடுக்க கூடிய, முட்டாள்களாவே வைத்திருக்க கூடிய எந்த ஒரு சக்திக்கும் ஆதரவு அளிக்க கூடியதாகவே இருக்கிறது. அரசு, பணம் வரக்கூடிய எதையும் ஏற்றக்கொள்ள கூடியது என்பதால், கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டது வேதனைக்குரியது.
 
 
ஐபிஎல்லில் வீரர்களுக்கு பணம், பானம் (மது), பாவை (மாது) என அனைத்து சமாச்சாரங்களும் தேவைகளை காட்டிலும் அதிகம் பூர்த்தி செய்யப்படுகிறது. வீரர்களும் நாட்டிற்காக விளையாடுவதைவிட இத்தனையையும் கொட்டிக் கொடுக்கும் நிறுவன முதலாளிகளுக்காக விளையாடுவதையே விரும்புகின்றனர். கை உடைந்திருக்கிறது, கால் உடைந்திருக்கிறது, தசை கிழிந்திருக்கிறது என நாட்டிற்காக விளையாட மறுக்கும் இவர்கள் ஐபிஎல் என்றால் எல்லாம் பறந்துவிட்டது நான் விளையாடுகிறேன் என்கிறார்கள். அதுவும் அங்கே விளையாட்டா நடக்கிறது? இல்லை. இப்பொழுது கூட பாருங்கள் மூன்று வீரர்கள் இவ்வளவு பணம் வந்தும் அது பத்தாது என்று மேட்ச் பிக்சிங் என்ற சூதாட்டத்தில் சிக்கி, பிடிப்பட்டுள்ளனர். இப்படி எவ்வளவு புது புது வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் சூதாட்டங்கள் (சட்டப்படி!) நடக்கிறது. சரி கோடிகளில் புரளும் வீரர்களும், நிறுவனங்களும் விளையாட்டை பார்க்கும் கோடிகணக்கான ரசிகர்களுக்காக ஒரு சதவீதமாவது செலவு செய்கிறார்கள் என்றால் அதுவும் ஒன்றும் இல்லை. வீரர்களுக்கும், நிறுவனகளுக்கும் பணத்தை தவிர வேறு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. இதனால் ஐபிஎல்லில் நிறுவனங்களுக்கிடையே போட்டி, பொறாமை, சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அனைத்து நடவடிக்கைகளும் அளவுக்கு மீறி வெட்ட வெளிச்சமாக நடந்து வருகிறது.
 
 
இப்படி பட்ட ஐபிஎல்லில் மயங்கி, மக்களும் விளக்கில் கருகும் விட்டில் பூச்சிகளாக இருக்கிறார்கள். இப்போட்டியில் பெட் கட்டியதற்காக இரு தினங்களுக்கு முன் ஒரு கொலையும் நடந்துவிட்டது. அதுவும் சென்னையில். பள்ளி சிறுவனை கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் கொலை செய்துவிட்டான். இந்த போட்டி இளைஞர்களை எங்கே கூட்டி செல்கிறது? சிந்திக்கும் நேரமிது சிந்தியுங்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பணம் விளையாடும் கொலைகளம் ஆகிவிட்டது. எவ்வளவு நாட்களுக்கு இப்படி நடக்கும்.
 
 
மட்டைப்பந்து விளையாட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டில் கூட, கால்பந்து உள்ளிட்ட ஏனைய விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகின்றன. அதன் காரணமாகவே இங்கிலாந்து கால்பந்து அணி உலக அரங்கில் சிறந்த அணியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைய நிலையில் இந்திய அரசும், ஊடகங்களும் கைகோர்த்துக் கொண்டு, இளைஞர்களிடையே மட்டைப்பந்து மோகத்தை திணித்து வருகின்றன! எனவே தான், இன்றை இளைஞர்கள் செய்தித்தாளை எடுத்தவுடன், மட்டைப்பந்து தொடர்பான செய்தி இடம் பெறும் கடைசிப் பக்கத்தை மட்டும் படித்து விட்டு உலக நடப்பையே அறிந்து விட்ட பெருமிதத்தோடு நடையைக் கட்டுகிறார்கள்!
 
தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டால்… மட்டைப்பந்து ஒளிபரப்பப்படும் "சேனல்களே" அவர்களின் கண்களுக்குத் தென்படுகிறது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 போட்டிகளை நடத்துவதால் அந்திசாயும் நேரம் முதல் நள்ளிரவு வரை, தமிழர்களின் இல்லங்கள் "ஐ.பி.எல்." மழையால் நனைகின்றன! தமிழகத்து இளைஞர்கள், எவனோ அடிப்பதைப் பார்த்து அகமகிழ்ந்து போகிறார்கள்!
  
 
 
உலகின் வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் என்ற நிலையில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், இரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் மட்டைப்பந்து விளையாட்டு விளையாடப்படுவது இல்லை. பூமிப்பந்தில் விரவிக் கிடக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் 12 நாடுகளில் மட்டும்தான் மட்டைப்பந்து விளையாடப்படுகிறது.
 
மட்டைப்பந்து விளையாட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டில் கூட இல்லாத அளவுக்கு, இந்தியாவில் அதன் "புகழ்"(கவர்ச்சி) கொடி கட்டிப் பறக்கிறது! இதன் மூலம் "எஜமானரின் தேர்ந்த அடிமைகள் நாங்கள்" என்பதை உலகுக்குக் காட்டி வருகிறது இந்தியா!!
 
இந்தியாவிலும் கூட 1983 – ஆம் ஆண்டு இந்தியா மட்டைப்பந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு வரை, மட்டைப்பந்து விளையாட்டாக இருந்தது. அதற்குப் பிறகு மட்டைப்பந்து விளையாட்டு, சூதாட்டக் களமாகவும், ஊழலின் உறைவிடமாகவும், பணம் கொழிக்கும் சந்தையாகவும் மாறத் தொடங்கியது.
 
இந்நிலையில், ஐந்து நாள் போட்டி (டெஸ்ட்), ஒரு நாள் போட்டியைத் தொடர்ந்து 20 "ஓவர்" மட்டைப்பந்து போட்டியை அறிமுகப்படுத்தியது பன்னாட்டு மட்டைப்பந்து வாரியம்.
 
இந்த 20 "ஓவர்" மட்டைப்பந்து ஜுரம் (காய்ச்சல்) இந்தியாவிற்குள்ளும் தொற்றிக் கொள்ள, அதையே வணிகமயமாக்க முற்பட்டது இந்திய மட்டைப்பந்து வாரியம். அச்சூழலில் இந்திய மட்டைப்பந்து வாரியத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக வெளியேறிய முன்னாள் நட்சத்திர மட்டைப்பந்து வீரர் கபில்தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திராவோடு இணைந்து "இந்தியன் கிரிக்கெட் லீக்" என்றொரு அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் வாயிலாக "டிவென்டி – 20" என்கிற 20 "ஓவர்" மட்டைப்பந்து போட்டிகளை நடத்தினார்கள்.
 
"இந்தியன் கிரிக்கெட் லீக்" மூலமாக வரும் வருமானத்தை அறிந்தும், கபில்தேவ் கட்டமைத்த "இந்கியன் கிரிக்கெட் லீக்"கை ஓரங்கட்ட வேண்டும் என்கிற நோக்கோடு, பன்னாட்டு மட்டைப்பந்து வாரியத்தின் பேராதரவோடு "இந்தியன் பிரிமியர் லீக்" என்றவொரு அமைப்பை ஏற்படுத்தியது இந்திய மட்டைப்பந்து வாரியம்.
 
"இந்தியன் பிரிமியர் லீக்" நடத்தும் போட்டிகளில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்த விதம் தான் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது!
பணப் பெட்டியோடு வந்த அணி உரிமையாளர்களான முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, நடிகை பிரித்தி ஜிந்தா, நடிகர் ஷாருக்கான் போன்ற பல பண முதலைகள், -முன்னொரு காலத்தில் ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல-வீரர்களை ஏலம் எடுத்து, விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள்.
 
 
 எதிர்கால தமிழ்ச் சமூகத்தை நன்முறையில் கட்டமைக்க வேண்டிய இளைஞர்களே! - மட்டைப்பந்து விளையாட்டு என்பது, உங்கள் மண்ணின் விளையாட்டைக் கொல்ல வந்த நச்சு. போலியான இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதிலும் மட்டைப்பந்து விளையாட்டிற்கு பெரும் பங்கு உண்டு!

 
இந்தியா - இந்துத்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் இந்த மட்டைப்பந்து விளையாட்டு, தமிழர்களுக்கும், உழைக்கும் ஏனைய மொழி - இன மக்களுக்கும் எதிரானது. நம் மண்ணைக் காவு கேட்கும், உலகமயத்தை உயர்த்திப் பிடிக்கும், மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர்த்து, மண்ணின் விளையாட்டுகளைத் தூக்கிப் பிடிப்போம்!
"மட்டைப்பந்து விளையாட்டு" என்பது இந்தியத் துணைக்கண்டத்துக்குச் சொந்தமான பாரம்பரிய விளையாட்டு அல்ல; வெள்ளை ஏகாதிபத்தியம் எந்தெந்த நாடுகளை எல்லாம் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரம் செலுத்தியதோ, அந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு!
 
போட்டியின் வெற்றி – தோல்விகளைப் பற்றி, விளையாடும் வீரர்களே கவலைப்படாத, வீரர்கள் மற்றும் வாரியங்களின் கல்லா நிரப்பும் ஒரே "சேவை"யைச் செய்யும், மட்டைப்பந்து விளையாட்டைப் பார்ப்பதற்கு, உழைத்துச் சேர்த்த பணத்தையும், உன்னதமான பொழுதையும் விரயம் செய்தல் என்பது நம் மடமையைக் காட்டுமேயன்றி .
இன்று மட்டைப்பந்து விளையாட்டு, "விளையாட்டு" என்ற தளத்தைக் கடந்து, சூதாட்ட வணிகம் என்ற சுழலில் சிக்கி நிற்கிறது!
 
 
பணமுதலைகள் நர்த்தனமாடும் - ஊழலின் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் - அடிமை விளையாட்டான மட்டைப் பந்தைப் புறக்கணிப்போம்!

No comments:

Post a Comment