தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி



கடந்த ஞாயிற்றுக் கிழமை 19 .05.13 அன்று மே பதினேழு இயக்கத்தால் சென்னை தமிழர் கடலோரம் கண்ணகி சிலை அருகே நினைவு கூறப்பட்டது. ஏறக்குறைய மணி நான்கிற்கு நான் கடற்கரையை அடைந்தேன் .

கொஞ்சம் தோழர்கள் தன்விருப்புடன் நினைவுத் தழல் மேடையை செய்து கொண்டிருந்தனர் . சற்று நேரத்தில் காவல்துறை ஊர்திகள் வந்தது .நினைவேந்தல் நிகழ்ச்சியை சுற் றிலும் காவல்துறையினர்
நின்று கொண்டனர் . ஆனால் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை . ஒரு சில எருமைத் தோல் கொண்ட மக்கள் எட்டி வேடிக்கை பார்த்துவிட்டு அகன்று விட்டனர் .

நான் ஒரு செய்தி அட்டையை கையில் எடுத்துக் கொண்டு மணலில் உட்கார்ந்து கொண்டேன் .( செய்தி அட்டை : நம் நடவடிக்கைகளை தீர்மானிப்பது வட்டுக்கோட்டை தீர்மானமே , அமெரிக்கத் தீர்மானம் அல்ல). வயதான பெண்களும் குழந்தைகளோடு பெரியவர்களும் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக கூடியது.
மணி 4.45க்கு பறை இசை முழங்கியது. சற்று நேரத்தில் திரு. வை. கோ.,திரு.
வெள்ளையன் போன்றோரும் வந்து கூட்டத்தை வணங்கி விட்டு எங்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டனர் .

 பாவாணர் தாய்த் தமிழ்ப் பள்ளி இளஞ்சிட்டுக்கள் பாவலரேறு அவர்களின் பாடலுக்கு ஆடினர் . இந்தியாவையும் , புத்த இலங்கையையும், அமெரிக்காவையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன . தலைவர்கள் தழலை ஏற்றி வைத்து விட்டு வந்தவுடன் திரு. வைகோ ஒலி பெருக்கி இல்லாமலே உரையாற்றினார் . பின்னர் மெழுகுவர்த்தியும் , காகித குவளையும் வந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டது . சுடர்களோடு முழக்கங்களும் கடலோரம் ஆர்த்தது .

ஏனோ இருபுறமும் விளக்குக் கம்பங்களில் விளக்குகள் அணைக்கப்
பட்டே இருந்தது . தமிழர் கடலோரம் காற்றின் வேகத்தையும் மீறி ,
மெழுகுவர்த்தியோடு மக்கள் உணர்ச்சியோடு நினை கூர்ந்தது நெஞ்சை நெகிழச் செய்தது.


ஆம் மறவோம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனப்படுகொலையை ,
ஓய மாட்டோம் தமிழீழம் மலரும் வரை .
நினைத் தழலில் கண்டது முத்துக்குமாரை , செங்கொடியை , நம் மாணவர்களின்
எழுச்சி மிக்க போராட்டத்தை , உயிர்த்தெழுந்த பாலச் சந்திரனை யன்றோ?

No comments:

Post a Comment